ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் 4 மாதம் நீட்டிப்பு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம்  4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Feb 25, 2019, 05:04 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம்  4 மாதம் நீட்டிப்பு! title=

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம்  4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

அதிமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. 

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

எனினும் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் ஆணையத்தின் காலம் முதலில் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் இரண்டு முறை தலா 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

அதன்படி 2019, பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் விசாரணையை முடித்திருக்க வேண்டும். ஆனால், இந்த காலத்திற்குள் விசாரணை நிறைவடையவில்லை. எனவே, ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீட்டித்து அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் இந்த அவகாசத்திற்குள் ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Trending News