கூடிய விரைவில் திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை முழுமையடையும்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கப்பணிகள் விரைவில் முழுமையாக முடிக்கப்படும் என சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது!

Last Updated : Jul 13, 2019, 05:14 PM IST
கூடிய விரைவில் திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை முழுமையடையும்! title=

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கப்பணிகள் விரைவில் முழுமையாக முடிக்கப்படும் என சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து, கிருஷ்ணகிரி வரை சுமார் 182 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை, புதுச்சேரி - கிருஷ்ணகிரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் - 66ன், ஒரு பகுதியாகவும் உள்ளது. திண்டிவனம் - -கிருஷ்ணகிரி இடையிலான இச்சாலையின் 7 மீட்டர் அகலத்தை, 10 மீட்டராக விரிவுபடுத்தி, இருவழி சாலையாக மாற்றும் வகையில், இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இச்சாலை விரிவாக்கப்பணியில் இரண்டு பெரிய பாலங்கள், 16 சிறிய பாலங்கள், 366 குறும்பாலங்கள்; இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தவிர, திண்டிவனம் - கிருஷ்ணகிரி வரை, ஒன்பது இடங்களில், புறவழிச் சாலைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த 2012, மே மாதம் 610 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஹைதராபாதை சேர்ந்த, 'டிரான்ஸ்ட்ராய்' நிறுவனம், இச்சாலை விரிவாக்கப்பணிகளை துவங்கியது. மத்திய அரசு இலக்கின்படி, 2014-ன் ஏப்ரல் மாதத்தில் இப்பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால் கடந்த, 2012ல் துவங்கியபணிகள், 50% முடிவடைந்த நிலையில், கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனம், நிதியின்றி முடங்கியது. 

இதனால், சாலை விரிவாக்கப் பணிகள் முடிக்கப்படாமல் 2016 முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரையிலான சாலையில், மெகா சைஸ் பள்ளங்கள் அதிகரித்து, படுமோசமாக காணப்படுகிறது. 

குறிப்பாக, திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரை சாலைகள் போக்குவரத்திற்கு உகந்ததற்ற நிலையில் மாறின. இதனால், திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க, இரண்டு ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளும் முயற்சியில், விழுப்புரம் நகாய் அதிகாரிகள், கடந்த ஓராண்டாக ஈடுபட்டு வந்தனர். அதற்காக, மத்திய அரசிற்கு சாலை விரிவாக்கப்பணிக்கான கோப்புகளை அனுப்பினர். அதன்படி, முதற்கட்டமாக, திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் விபத்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள, 4.14 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

இதை தொடர்ந்து, திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கப்பணிக்கு 519 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த தொகை மூலம், நிலுவையில் உள்ள சாலை பணிகள், பாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட விரிவாக்கப்பணிகள், முழுமையாக மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கபட்டது. 

இந்நிலையில் தற்போது இந்த சாலை விரிவாக்கப்பணிக்கான டெண்டர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விடப்பட்டதாகவும், M/S SPK&Co நிறுவனத்திற்கு கடந்த 29 மே, 2019-ஆம் நாள் ஒப்பந்தம் கைமாற்றி விடப்பட்டதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்துள்ளது. மேலும் சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Trending News