தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 11 முறையும், சென்னை பல்லவன் இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் 10 முறையும் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுகள் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.35 காரணி மடங்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் தொழிற்சங்கத்தினர் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இதை வலியுறுத்தி கடந்த மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியை கடந்தும் அமைச்சருடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பெரும்பாலான டிரைவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர்.
கோயம்பேடு, பாரிமுனை, வடபழனி, எண்ணூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேருந்து நிலையங்களிலும் பேருந்து இயங்குவது நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து,அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
எனவே பேச்சுவார்த்தையில் இருந்து தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் வெளியேறி அதிகாரபூர்வ ‘ஸ்டிரைக்’ அறிவிப்பை நேற்று இரவு 8 மணியளவில் வெளியிட்டனர். இதையடுத்து இயக்கப்பட்ட ஒரு சில பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
வெளியூர் செல்லும் பெரும்பாலான பஸ்களும் இரவில் இருந்து நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்க வேண்டிய நிலை பலருக்கு ஏற்பட்டது. அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்சில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, கோயம்புத்தூரில் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பல இடங்களில் அசம்பவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
We are suffering because of the strike as less number of buses are plying and private buses are overcharging: School student, Coimbatore #TamilNadu pic.twitter.com/32Vj4kLNII
— ANI (@ANI) January 5, 2018