ஜெ.,வுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டதில் திருட வந்த கும்பல் தான் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக எஸ்.பி., முரளி ரம்பா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவர் நள்ளிரவில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார். இவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
ஒம் பகதூரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, கிஷன் பகதூரை கட்டி போட்டு சென்றதாகவும், குற்றவாளிகள் கறுப்பு நிற ஸ்கார்பியோ காரில் வந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் எஸ்.பி., முரளி ரம்பா, நிருபர்களிடம் பேசுகையில்: இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க டிஎஸ்.பி.,க்கள் கொண்ட 5 படை அமைக்கப்பட்டுள்ளது. எஸ்டேட்டில் திருட வந்த கும்பலால் காவலாளி ஓம்பகதூர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். காவலாளி அறையில் கண்ணாடி உடைந்துள்ளது. இங்கு இருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்படுகிறது. எஸ்டேட் உள்ளே யாரும் நுழையவில்லை. மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்படுகிறது என அவர் கூறினார்.