மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாணவர் அணி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை மதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று மாணவி வளர்மதியை நிபந்தனை இன்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
இதைக்குறித்து வைகோ கூறியதாவது:-
மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்ற உரிமைப் போராட்டங்களை நசுக்கிடும் அடக்குமுறைச் செயலில் ஈடுபட்டுள்ளன.
கதிராமங்கலம் போராட்டத்தை ஆதரித்து துண்டறிக்கை வெளியிட்டதற்காக சேலம் பெரியார் பல்கலைக் கழக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது அடக்குமுறையின் உச்சகட்டமாகும்.
தன்னெழுச்சியாக உருவாகும் இளைஞர், மாணவர்களின் போராட்டத்தை எந்த அடக்குமுறையாலும் அச்சுறுத்தி ஒடுக்கிவிட முடியாது என்பதை இக்கூட்டம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனே விடுதலை செய்ய வேண்டும். பெரியார் பல்கலைக் கழகம் விதித்த தடையை அகற்றி, மாணவியின் கல்வி பெறும் உரிமையை நிலைநாட்டிட வேண்டும் என மதிமுக சார்பில் தமிழக அரசை இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்துகிறோம் என வைகோ அவர்கள் கூறினார்.