தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுவதால் அதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி, அதில் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும் பலர் இதில் உயிரிழந்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிக்காய்ச்சல் ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 48 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறார்கள்.