சென்னை: வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் கமல்ஹாசன் என்பது நாடறிந்த உண்மை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் எனக் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சமூக வலைத்தளத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கடும் பதிலடி தந்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, "மகாத்மாவின் படுகொலையை கண்டித்து நாடே பதறியதுகொலையாளி தூக்கிலிடப்பட்டார்ஆனால் அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது விஷமத்தனமானதும் ஆபத்தானதும் கூட. புதிய அரசியலை முன்னெடுப்பதாக கூறும் கமல் பழையதை கையில் எடுப்பது மதவிஷம் பரப்பி வரும் ஓட்டுக்காகத்தானே? அரசியல் வேஷம்"
தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று கமல் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர். ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை! ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி? அரசியல் நடிப்பு??? எனக் கேள்வி எழுப்பியதோடு கடுமையாக கமலை சாடியுள்ளார்.