மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா 850 காளைகளுடன் 1607 மாடுபிடி வீரர்களுடனும் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது.
இதையடுத்து அவனியாபுரத்தில் கடந்த 5-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன. இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற முடிவு செய்யப்பட்டு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளான வாடிவாசல் அலங்கரிப்பு, பார்வையாளர் மேடையமைப்பு, இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்தன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 850 காளைகளுக்கும், 1,607 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டது. இன்று காலையில் மாடுகளுக்கு கால் நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது.
850 காளைகள் இருப்பதால் இன்று மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதலில் கோயில் காளைகள் விரட்டப்பட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கும். பின்னர், மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்படும்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவர்களுக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறை தலைவர் காவல் கண்காணிப்பாளர்கள், 50-க்கும் மேற்பட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாளை உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அங்கும் அதற்கான ஏற்பாடுகள் ஜோராக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.