புட்லூரில் பரபரப்பு: உயிருடன் இருந்த அம்மாவிற்கு ஈமச்சடங்கு செய்த மகன்..கதறி அழுத தாய்!

திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அம்மா உயிருடன் இருப்பது தெரியாமல் அவரது மகன் தாய்க்கு ஈமசடங்குகள் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2023, 04:54 PM IST
  • திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு மூதாட்டியின் உடல் சிதறிய நிலையில் கிடந்துள்ளது.
  • அதை தன் தாயென நினைத்து ஒரு நபர் புதைத்துள்ளார்.
  • இறந்ததாக நினைத்த தாய் உயிருடன் வந்துள்ளார்.
புட்லூரில் பரபரப்பு: உயிருடன் இருந்த அம்மாவிற்கு ஈமச்சடங்கு செய்த மகன்..கதறி அழுத தாய்! title=

உடல் சிதறி பலி:

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே உடல் சிதறிய நிலையில்  ஒரு மூதாட்டியின் உடல் சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்ற நபர், இது தனது தாய்தான் என்று கூறி அந்த உடலை வாங்கி ஈம சடங்குகளை செய்துள்ளார்.  இதையடுத்து தனது தாய் உயிருடன் மீண்டும் திரும்பி வந்ததால் அந்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

காணாமல் போன தாய்-உயிரிழந்ததாக நினைத்த மகன்..

திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கம்மாள் (66).  இவருக்கு காந்தி, வெங்கடேசன் சரவணன் என்ற  3 மகன்கள் உள்ளனர்.  இதில் காந்தி, வெங்கடேசன் ஆகிய இருவரும் சென்னையிலும்    சரவணன்  சேலை கண்டிகை கிராமத்திலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொக்கம்மாளுக்கும் எதிர்வீட்டு காரர்களுக்கும் பிரச்சைனை ஏற்பட்டதாகவும் அப்போது எதிர் தரப்பினர் அடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.   இதனால் மூதாட்டி கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள மகன் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் கடந்த 24-ந் தேதி திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கும் புட்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதறி மூதாட்டி ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.  இது குறித்து  ரயில்வே போலீசார் துண்டறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர்.   இதனைக் கண்ட சொக்கம்மாளின் கடைசி மகன் சரவணன், சென்னையில் உள்ள அண்ணனுக்கு தகவல் சொல்ல முயற்சித்துள்ளார்.  செல்போனை அண்ணன் காந்தி, வெங்கடேசன் என யாரும் எடுக்காததால் “இது எங்க அம்மா தான்” எனக் கூறி ரயில்வே போலீசாரிடம் தெரிவித்து உடலை சேலைகண்டிகை  சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துள்ளார்.  

மேலும் படிக்க | சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... அதுவும் இந்த காரணத்திற்காகவா?

உயிருடன் வந்த தாய்!

கடந்த வியாழக்கிழமையன்று (மே 29) சேலை கண்டிகை கிராமத்தில் உள்ள சரவணன் வீட்டிற்கு தாய் சொக்கம்மாள் வந்துள்ளார். உயிரிழந்து விட்டதாக நினைத்து புதைத்த தாய் எப்படி மீண்டும் எழுந்து வந்து நிற்கிறார் என அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்திருக்கிறார் சரவணன். இதையடத்து, என்ன செய்வதென்று அறியாமல் நின்றிருக்கிறார் சரவணன்.  “நான் உயிரோடு தானே இருக்கிறேன்” என தாயும் அழுது புலம்பியுள்ளார்.  இதனையடுத்து தாய் மீண்டும் தனது வீட்டிற்கு வந்ததாக சரவணன் ரயில்வே போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.  வேறு ஒருவரது உடலை எனது தாயார் எனக் கூறி நல்லடக்கம் செய்ததாக ஒப்புக் கொண்டார்.  இதனால் ரயில்வே போலீசார்,  வேறு யாராவது காணாமல் போய், புகார் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினரிடமும் விசாரிக்க சாெல்லி கூறினர். 

உடல் சிதறி இறந்த மூதாட்டி..

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்  என்பவரது மனைவி சகுந்தலா(56) என்பவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தாவுத்துக்கான்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த 24-ந் தேதி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகார் இருப்பது தெரியவந்தது.   இதனையடுத்து சகுந்தலாவின் உறவினர்கள் முன்னிலையில் துணை வட்டாட்சியர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர்  கணேஷ்,  விஏஓ மலர்க்கொடி, ரயில்வே இருப்புப்பாதை போலீசார் ஆகியோர் சேலை கண்டிகை சுடுகாட்டில் அடக்கம் செய்த மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்தனர்.  அப்போது சகுந்தலாவின் உடலில் இருந்த மச்சம் மற்றும் கையில் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து இது சகுந்தலா தான் என உறுதி செய்தனர்.  இதனையடுத்து டிஎன்ஏ டெஸ்ட்டுக்காக அவரது தலை முடி ஆகியவற்றை மருத்துவர்கள் கொண்டு சென்றனர். 

மேலும் சகுந்தலா என்பவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தாவுத்துக்கான் பேட்டை கிராமத்திற்கு உறவினர்களை பார்ப்பதற்காக அடிக்கடி சென்று வருவார்.  ஆனால் திருவள்ளூருக்கும் புட்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்தது குறித்து விசாரணை நடைபெறும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் இறந்தவர் தனது தாயார் எனக் கூறி உடலை வாங்கி அடக்கம் செய்த நிலையில் மீண்டும் உயிரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் இறந்தவர் உறவினரை கண்டுபிடித்து உடலைத் தோண்டி எடுத்து உறுதி செய்த சம்பவம் சேலை கண்டிகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மேகதாது பிரச்சனை: திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது - எடப்பாடி பழனிசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News