புது டெல்லி: இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். நிதி ஆயோக் அமைப்பின் 5வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
நிதி ஆயோக் கூட்டதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றே டெல்லி வந்தடைந்தார். இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க்கவுள்ளார்.
காலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையும், நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரயும் கோரிக்கை வைத்தார். பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
இந்தநிலையில், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது தமிழகத்திற்கு தேவையான காவேரி நீரை கர்நாடகா உடனடியாக திறந்து விட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேகதாது திட்டத்திற்கு எக்காரணம் கொண்டு அனுமதி தரக்கூடாது எனவும் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.