தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் நேற்று பங்கேற்றுள்ளனர். சில பகுதிகளில் கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது,
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை பொங்கலுக்கு முன் வழங்கும் என்றார். பொது மக்களின் நலன் கருதி, வேலைநிறுத்தத்தை கைவிட்டு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் தங்கள் தரப்பு நிபந்தனைகள் முழுவதுமாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேற்று, வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், இந்த பிரச்சினையை பின்னர் விசாரிக்கலாம். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக்கொள்கிறோம். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து ஊழியர்கள் பொதுமக்களின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.
இதனையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை செய்த பிறகு 2.44 சதவீதத்தை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்று பணிக்கு திரும்ப தயார் எனவும், ஜனவரி 4-ம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு தங்களுடன் பேச்சுவாரத்தை நடத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், இன்றுடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதன் பிறகு போராட்டம் திரும்ப பெறுவது குறித்து ஆலோசிக்கபடும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். இதனால் இன்றும் 8_வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
Transport workers' unions in #TamilNadu enters eighth day, they are demanding wage hike among other things. #Visuals from Rameswaram. #BusStrike pic.twitter.com/LgpFHqnj4a
— ANI (@ANI) January 11, 2018