ஏப்.,3 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மறியல் :விவசாய சங்கங்கள்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3-ம் தேதி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 1, 2018, 11:05 AM IST
ஏப்.,3 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மறியல் :விவசாய சங்கங்கள் title=

நேற்று தஞ்சாவூரில் விவசாய சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க தலைவர்கள் கூட்டாக கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாதகாலம் மத்திய அரசு அவகாசம் கேட்பது விவசாயிகளை ஏமாற்றுவதற்காகத்தான். மேலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதால் இந்த அவகாசம் என கேட்டுள்ளனர். இது கொலை செய்வதற்கு சமம். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 3 மாதம் அவகாசம் கேட்பதால் இந்த ஆண்டும் தண்ணீர் வருவது கேள்விக்குறி தான்.

தண்ணீர் வரவில்லை என்றால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். விவசாயிகளை அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கூட செயல்படுத்த மோடி மறுக்கிறார் என அய்யாக்கண்ணு கூறினார்.

அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல், விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள், வணிகர்கள், விவசாயிகள் கலந்துக்கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர் போராட்டம் நடத்த வேண்டும். மேலும் தமிழக அரசு பஸ்களை இயக்கக்கூடாது. ரெயில்கள், விமானங்கள் போக்குவரத்தையும் ரத்துசெய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் செயல்படக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தஞ்சையில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என
பி.ஆர்.பாண்டியன் கூறினார். 

தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், அதேவேளையில் தமிழக எதிர்க்கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் மத்திய அரசுக்கு எதிராக போட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.ரெங்கநாதன் கூறினார்.

Trending News