இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2018, 06:36 PM IST
இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் title=

கடந்த அக்டோபர் 26-ஆம் நாள், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். (இவரை தொடர்ந்து இதுவரை 30 அமைச்சர்கள் ராஜபக்சே அரசவையில் பதவியேற்றுள்ளனர்)

அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார். 

இதனையடுத்து இலங்கை அரசின் பெரும்பான்மையினை நிரூபிக்க நவம்பர் 14 ஆம் நாள் குறிக்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக கடந்த நவம்பர் 9 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விவாதம் நேற்று இலங்கை உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்களான நலிண் பெரேரா, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது நாடாளுமன்றம் கலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Trending News