பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைப்பேசி இணைப்புகள் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் மாறன் சகோதரர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டார்.
இதனால் அரசுக்கு ஒருகோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.
BSNL illegal telephone exchange case: Kalanithi Maran, Dayanidhi Maran and five others have been discharged by CBI court from the case today. Court said the prosecution failed to prove the case.
— ANI (@ANI) March 14, 2018
இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வாரம் இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி நடராஜன் இதற்கான தீர்ப்பு மார்ச் 14ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி, இன்று மதியம் 2.30 மணிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.