Stock Market News: மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளிவந்தன. அதற்கு முன்னர் ஜூன் 1 ஆம் தேதி எக்சிட் போல் முடிவுகள் வெளியாயின. சனிக்கிழமை மாலை எக்சிட் போல் முடிவுகள் வெளிவந்த நிலையில், திங்களன்று பங்குச்சந்தை பெரும் ஏற்றத்தைக் கண்டது. எனினும், செவ்வாயன்று எக்சிட் போல் முடிவுகளுக்கு மாறாக வந்த தேர்தல் முடிவுகள் காரணமாக சந்தை வீழ்ச்சியடைந்தது. இதில் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், சில முதலீட்டாளர்கள் லாபமும் கண்டுள்ளனர்.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ்
சில பங்குகள் சந்தைகளின் ஏற்ற இறக்கங்களால் சிறிதும் பாதிக்கப்படாமல் சீராக செயல்பட்டன. அவற்றில் கடந்த ஐந்து நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (Heritage Foods) பங்கும் ஒன்று. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகளின் சமீபத்திய ஏற்றம், பங்குச்சந்தையில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க பெரிய ஏற்றங்களில் ஒன்றாகும்.
செவ்வாய்க்கிழமை ஏமாற்றமளிக்கும் வகையில் வந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்த போதிலும், FMCG பங்கான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் அதிக தாக்கத்தை உள்வாங்காமல் நெகிழ்ச்சியுடன் இருந்தது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிற்கான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் பங்குகளின் ஷேர் ஹோள்டிங் பேட்டர்ண் இதற்கு காரணமாக இருக்கலாம்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி இந்த எஃப்எம்சிஜி நிறுவனத்தில் கணிசமான 24.37 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய நாட்களில் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு விலை ஏற்றத்தால், நாரா புவனேஸ்வரியின் நிகர மதிப்பு வெறும் ஐந்து நாட்களில் 579 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
மளமளவென உயர்ந்த சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் நிகர மதிப்பு
ஹெரிடேஜ் ஃபுட்ஸின் முக்கிய ப்ரமோட்டராக இருக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார். அவர் வைத்திருக்கும் 2,26,11,525 ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகளின் உரிமை, மொத்த பங்குகளில் 24.37 சதவீதமாகும். இதன் காரணமாக நிறுவனம் எடுக்கும் முடிவுகள் மற்றும் நிறுவனத்தின் செயல்திறனில் அவரது செல்வாக்கு வலுவாக உள்ளது. அவரது அரசியல் சார்பு, வெற்றி, தோல்வி ஆகியவவை பங்கு விலையை பாதிக்கலாம்.
31 மே 2024 அன்று ஹெரிடேஜ் ஃபுட்சின் விலை, ஒரு பங்குக்கு ரூ. 402.90 என முடிவடைந்தது. அதன் பின்னர், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகளின் விலை, கடந்த ஐந்து தொடர்ச்சியான அமர்வுகளில் உயர்ந்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்ததன் காரணமாக, செவ்வாய்கிழமை பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்த நிலையிலும், இந்த FMCG பங்கு ஏற்றத்தில் தான் முடிந்தது.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கின் விலை இன்றும் ஏற்றத்துடன் தொடங்கியது. இதுவரை இண்ட்ராடேவில் ஒரு பங்குக்கு ரூ. 659 என்ற அதிகபட்ச அளவைத் தொட்டது. இது இந்த பங்கின் புதிய லைஃப்டைம் ஹை ஆக மாறியது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஐந்து தொடர்ச்சியான அமர்வுகளில், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கின் விலை ஒரு பங்கிற்கு ரூ. 256.10 உயர்ந்துள்ளது.
ரூ. 579 கோடி உயர்ந்த நிகர மதிப்பு
2,26,11,525 ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகளை நாரா புவனேஸ்வரி வைத்திருக்கும் நிலையில், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகளின் விலை சமீபத்திய உயர்வு அவரது நிகர மதிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. இந்த பங்கின் அதிரடி உயர்வு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரியின் நிகர மதிப்பு ரூ. 5,79,08,11,552.5, அதாவது ரூ. 579 கோடி உயர்ந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ