கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கிய "பதஞ்சலி" என்ற நுகர்வோர் நிறுவம் கோடிகளில் திளைக்கும் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட் என உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தை யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தொலைத்தொடர்பு துறையிலும் பதஞ்சலி அடி எடுத்து வைத்துள்ளது. ஆமாம், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துடன் சேர்ந்து "சுதேதி சம்ரித்தி" என்ற சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
சிம் கார்டை அடுத்து, உலக முழுவதும் 95 சதவீத வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ்-ஆப் செயலிக்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம், இந்தியா பேசுகிறது என்ற வாசகத்துடன் "கிம்போ" என்ற புதிய செயலியை பிரமாண்டமாக அறிமுகம் செய்தது. "கிம்போ" செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த செயலி கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட "போலோ" என்ற செயலின் காப்பி தான், இந்த "கிம்போ" செயலி என தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை இணையவாசிகள் அம்பலப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
"போலோ" செயலில் உள்ள அத்தனை அம்சங்களும் "கிம்போ" செயலியிலும் உள்ளது. "கிம்போ" செயலியில், ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) கூட போலோ என்று தான் வந்துள்ளது. இதுக்குறித்து "கூகிள் ப்ளே" ஸ்டோருக்கு புகாரும் அனுப்பப்பட்டதால், கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து "கிம்போ" செயலி நீக்கப்பட்டது. மேலும் அதன் இணையதளமான www.kimbho.com முடக்கப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்ப காரணங்களால் "கிம்போ" செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என "பதஞ்சலி" நிறுவனம் சார்பாக கூறப்பட்டு உள்ளது.