நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 08 ஆம் தேதி வரை நடைபெறுகிறது!
நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.
நவராத்திரி பண்டிகையை கொண்டாட கலசம் வைத்து அதில் தேவியை எழுந்தருள வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. நவராத்திரி பண்டிகை சரஸ்வதி பூஜையுடன் முடியும். ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விஐயதசமி. நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
புரட்டாசி மாத, அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
கொலுபடிகளின் தத்துவம் :-
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.
முதல் படி: அதாவது கீழ் படியில் ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.
இரண்டாம் படி: இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
மூன்றாம் படி: மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
நான்காவது படி: நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஐந்தாம் படி: ஐந்தறிவு கொண்டநான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஆறாவது படி: ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஏழாம் படி: சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
எட்டாம் படி: தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படி: முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும்.
பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக தேவி பாகவதம் சொல்கிறது. ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள், முப்பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்களைக் குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம்.
நவராத்திரியின் முதல் நாள்:-
அம்பாள்: சாமுண்டி.
கோலம்: பச்சரிசி மாவால், புள்ளிக் கோலம் போட வேண்டும்.
மலர்கள்: தாமரை, மல்லிகை, வில்வம்.
நெய் வேத்தியம் : காலையில் வெண்பொங்கல், மாலையில் காராமணி சுண்டல்.