புதுடெல்லி: கொரோனா நோய்த்தொற்றானது மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. ஆனால், மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவும் நம்மைப் போல் பாதிக்கப்படவில்லை என்பது நிதர்சன உண்மை.
கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக, லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, இப்போது lockdown, unlock என மக்கள் சமூகமாக கூடும் சூழல் தவிர்க்கப்படும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
இந்த நிலையில் வழக்கமான பழக்கங்கள் மாறிப்போய், நேரம் சென்று குளிப்பது, உணவு சாப்பிட்டப் பிறகு குளிப்பது என அன்றாட வாடிக்கைகள் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. ஆனால் உணவு சாப்பிட்ட பிறகு குளிப்பது ஆரோக்கியத்தை சீர்குலைக்கிறது. இது பற்றி உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்தால், உங்களால் இதுபோன்ற தவறைச் செய்ய முடியாது.
உடலின் வெப்பநிலையில் மோசமான பாதிப்பு
உணவு உண்ட உடனே குளிப்பதால் உடலின் வெப்பநிலை குறையும். உடலின் வெப்பநிலையை சீராக்கும் வகையில் உடனே கை, கால்கள், முகம் போன்ற உடலின் பிற பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது, உடலின் இயல்பான தன்மையை பாதிக்கும்.
இதைத் தவிர, உணவை ஜீரணிக்க உதவும் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ரத்தத்தின் தட்பம் குறைவதால், வெப்பநிலையை சமன் செய்வதற்காக, உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தம் பாயத் தொடங்குகிறது. இதனால் உணவு செரிமானத்தில் சிக்கல் ஏற்படுவதோடு, உணவு ஜீரணமாக நேரமும் அதிகமாகும்.
வெந்நீர் குளியலும் ஆபத்து...
உடலின் வெப்பநிலையைக் குறைக்க சூடான நீரில் குளிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் வெந்நீரும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே இருக்கும். ஏனென்றால் சூடான நீரில் குளித்த உடனே, உடலை குளிர்விக்கும் பொருட்டு உடலின் வெப்ப அளவில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் இயல்பாக இருக்கும் ரத்த ஓட்டத்தில் மாறுதல் ஏற்படும். அதுமட்டுமல்ல, மூளைக்கு போதுமான ரத்தம் கிடைக்காமல், சிலருக்கு தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேதத்தின்படி, உணவை சாப்பிட்ட பிறகு வெப்பம் அதிகரித்து உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாகின்றன. அது உணவை துரிதமாக சீரணிக்க உதவுகிறது. ஆனால், உணவுண்ட உடனே குளிக்கும்போது வயிற்றின் வெப்பநிலை குறைகிறது. அதனால்தான் உணவு விரைவில் செரிமாணம் ஆகாது. எனவே சாப்பிட்ட பிறகு குறைந்தது 1 மணி நேரத்திற்கு குளிக்க வேண்டாம். அது மட்டுமல்ல, உணவு சாப்பிட்ட உடனே கடுமையான உடற்பயிற்சிகளையோ அல்லது கடும் உழைப்பு தேவைப்படும் வேலைகளையே செய்ய வேண்டாம் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.
Also Read | கொரோனாவை தவிர்க்க என்ன சாப்பிடலாம்? தெரிந்துக் கொள்ளுங்கள்
உணவுக்கு பிறகு நீராடுவதை அலோபதியும் ஆதரிக்கவில்லை
நவீன அறிவியலின் படி, உணவை சாப்பிட்ட பிறகு, கணையத்தில் இருந்து பெப்சின் என்ற நொதி வெளியிடப்படுகிறது, இது உணவை செரிமாணம் செய்யும் வேலையைச் செய்கிறது. ஆனால் சாப்பிட்ட உடனேயே குளிப்பது வயிற்றின் வெப்பநிலையை குறைப்பதால், வயிற்றுப் பாகுதியைத் தவிர உடலின் பிற பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிமாணம் பாதிக்கப்படுகிறது.
சாப்பிட்ட பிறகு குளிப்பதால் ஏற்படுவதாக கூறப்படும் இந்த பிரச்சனைகளை சுலபமாக தவிர்த்துவிடலாம். அதிலும் குறிப்பாக ஆரோக்கிய குறைவானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது ரத்த ஓட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் உணவு உண்ட பிறகு குளிப்பதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி என்று தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். விருந்தல்ல, எளிமையான உணவாக இருந்தாலும், உண்ட பிறகு குளிப்பது என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்றே சொல்லலாம்...