பரவும் கொரோனா வைரஸ்... முத்தம் கொடுப்பது; அரவணைப்பை தவிர்க்க வலியுறுத்தல்

கட்டி தழுவி அரவணைத்து அன்பை பரிமாறிக்கொள்வது, முத்தம் கொடுப்பது, கன்னங்களில் கன்னத்தை வைத்து அன்பு செலுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தல்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Feb 26, 2020, 12:50 PM IST
பரவும் கொரோனா வைரஸ்... முத்தம் கொடுப்பது; அரவணைப்பை தவிர்க்க வலியுறுத்தல்
Photo: Reuters

புது டெல்லி: இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி கிங், 1439 இல் பிளேக் நோயை பரவுவதை தடுக்க முத்தமிட தடை விதித்தார். தற்போது சீனாவிலிருந்து பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பை உலகம் எதிர்கொண்டுள்ள நிலையில், சில சுகாதார அதிகாரிகள் மீண்டும் உடல் ரீதியான பாசத்தைத் தவிர்ப்பதற்கு மக்களை வலியுறுத்துகின்றனர்.

அதாவது தொற்றுநோயியல் வல்லுநர்கள் கூறுகையில், உடல் ரீதியானதொடர்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இரண்டு மாதங்களில் டஜன் கணக்கான நாடுகளில் 2,700 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற ஒரு நோயின் வேகபயணத்தை (பரவுதல்) மெதுவாக்க உதவும் என்று கூறுகின்றனர். 

அமெரிக்கர்கள் கட்டி தழுவி அரவணைத்து அன்பை பரிமாறிக்கொள்வது பற்றி இருமுறை யோசிக்க வேண்டும். அதே நேரத்தில் பிரெஞ்சு மற்றும் இத்தாலியர்கள் தங்கள் பாரம்பரியமான கன்னங்களில் கன்னத்தை வைத்து அன்பு செலுத்துவதை மறுபரிசீலனை செய்யலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தொற்று நோய்கள் குறித்த மினசோட்டா பல்கலைக்கழகத்தின் நிபுணர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் கூறுகையில், "உங்கள் சமூகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தால், அது மிகவும் வேதனையான விஷயம். உங்கள் ஆபத்தை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களில் இதுவும் ஒன்று தான்" என்றார்.

இருமல் மற்றும் தும்மல்களில் உள்ள நீர்த்துளிகள் மூலம் பரவும் வைரஸால் நோய்த்தொற்றுகள் அதிகரித்து, ஏழு பேர் இறந்த இத்தாலியில், இந்த ஆலோசனையை மக்கள் ஏற்கத் தொடங்குகின்றனர்.