ஐரோப்பாவை போல தில்லியின் சாலைகள் மறுவடிவமைக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும் நகரத்தின் அனைத்து சாலைகளையும் ஐரோப்பா சாலைகளை போல தில்லி அரசு மறுவடிவமைக்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2019, 01:47 PM IST
ஐரோப்பாவை போல தில்லியின் சாலைகள் மறுவடிவமைக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால் title=

புதுடெல்லி: டெல்லியின் சாலைகளின் தோற்றத்தை மாற்றி டெல்லியை போக்குவரத்து நெரிசலில்லாமல் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஒரு பெரிய திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டம் கொண்டு வந்தால், போக்குவரத்து பிரச்சினை முடிவடையும், அதே வேளையில் சாலை விபத்துகளும் முடிவுக்கு வரும் என்று தில்லி அரசு கூறியுள்ளது. பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும் நகரத்தின் அனைத்து சாலைகளையும் தில்லி அரசு மறுவடிவமைக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal), டெல்லியின் சாலைகள் முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்படும். டெல்லியின் சாலைகளை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவதே எங்கள் முயற்சி என்றார். டெல்லி சாலைகள் ஐரோப்பாவின் சாலைகள் போல இருக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

மேலும் கெஜ்ரிவால் கூறுகையில், "தற்போது 9 சாலைகளை சோதனை அடிப்படையில் மறுவடிவமைப்பு செய்கிறோம். இது சுமார் 45 கி.மீ. இருக்கும். இதன்மூலம் போக்குவரத்து சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர முடியும். மேலும் விபத்துக்களையும் தவிர்க்க முடியும் என நம்புகிறோம்.

சாலைகளை அமைக்க அருகில் உள்ள நிலங்கள் பயன்படுத்தப்படும். நடைபாதைகள் போதுமான அளவு அகலமாக்கப்படும். அனைத்து நடைபாதைகளும் மறுவடிவமைப்பு செய்யப்படும். இதனால் உடல் ஊனமுற்றோரும் அவற்றை வசதியாகப் பயன்படுத்தலாம். ஆட்டோக்கள் மற்றும் இ-ரிக்‌ஷாக்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும். புதிய வடிகால், பழைய வடிகால்கள் மறுவடிவமைப்பு செய்யப்படும். சாலைகளில் இருபுறமும் அமர இருக்கைகள் நிறுவப்படும், தெருக்களில் விளக்குகள் நிறுவப்படும். முக்கியமாக சாலைகளில் மரங்கள் நடப்படும் என்று அவர் கூறினார். 

முதல் கட்டமாக எய்ம்ஸ் (AIIMS) முதல் ஆசிரமம் (Ashram) மற்றும் விகாஸ் மார்க் (Laxmi Nagar Chungi) முதல் கர்கார்டுமா (Karkarduma) வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக டெல்லி முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு சுமார் ரூ.400 கோடி செலவு ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Trending News