ஜோர்காட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறு நாட்களில் சுமார் 16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவு...
அசாம் மாநிலத்தில் ஜோர்காட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜோர்காட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் பிரணாப்ஜித் பிஸ்வானத், மோசமான உடல்நிலையுடன் பிறந்ததே, குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தார்.
மேலும், சில கர்ப்பிணிகள் காலங்கடந்து மருத்துவமனைக்கு வந்ததும், குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறினார். இருப்பினும், பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பச்சிளங்குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து விசாரிக்க, அசாம் மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட நிபுணர் குழு, ஜோர்காட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளது.