கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம்சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. இதனிடையே கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், இந்து-முஸ்லீம் மதத்தினரிடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என்றும், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்கான மத்தியஸ்தரை நியமனம் செய்வது பரிசீலிக்க உள்ளோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இன்று காலை மத்தியஸ்தர்கள் நியமிப்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் ஒய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம் பெற்றுள்ள மூன்று பேர் அயோத்தி பிரச்சனை குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள். நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்திற்க்குள் பேச்சுவார்த்தையை தொடங்கி 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும், முதல் நிலை அறிக்கையை 4 வாரத்தில் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மூடப்பட்ட அறையில் தான் மத்தியஸ்தர் குழு பேச்சுவாரத்தை நடத்த வேண்டும். அயோத்தி பிரச்சனை குறித்த சமரச பேச்சுவார்த்தையை எந்த ஊடகமும் செய்தி வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
இதில் முக்கிய விசியம் என்னவென்றால், பல ஆண்டுகளாக சர்ச்சையில் இருக்கும் அயோத்தி வழக்கில் மத்தியஸ்தராக நியமிக்கபட்ட மூன்று பெரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். குழுவின் தலைவர் நீதிபதி கலிஃபுல்லா காரைக்குடி, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பாபநாசம், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.