சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை சுமார் 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே-24-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளிவைக்கப்பட்டது.
சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கமான முறையை ரத்துசெய்வதாக சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்தது.
இந்நிலையில், கருணை மதிப்பெண் முறையை ரத்துசெய்வதை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனால், இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் என ஐகோர்ட் சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தியது. மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் மே 28-ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.