புதுடெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை செய்தவர்கள் பட்டியலில் சேர்க்க இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத மசூத் அசார், பதன்கோட் உள்ளிட்ட பல தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். இவனை ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சி செய்து வந்தது. ஆனால், இதற்கு சீனா தொழில்நுட்ப ரீதியாக முட்டுக்கட்டை போட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இது தொடர்பாக சீனாவிடம் பேசுவோம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் சேர்ப்பதற்கு சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஐ.நா., விதிகளின்படி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் குழுவானது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்த காலம் வேண்டியுள்ளதால், தடைக்கு சீனா தொழி்ல்நுட்ப தடை விதித்துள்ளது என்றார்.
தீவிரவாதத்தை கையாள்வதில் சீனா இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. தீவிரவாதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சீனா புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை பொது சவாலாக எதிர்கொண்டு வரும் இந்தியாவின் போராட்டத்தில் சீனா பங்கேற்க வேண்டும். தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் எதிர்ப்போம் என சீனா மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.