டெல்லி: Covid-19 அச்சம் காரணமாக டெல்லியில் அமல் செய்யப்பட்டுள்ள லாக்-டவுன் உத்தரவை அடுத்து, பல மாதங்களாக CAA எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் அகற்றப்பட்டதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை பரவாமல் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் லாக்-டவுன் (Lockdown) உத்தரவு போடப்பட்டுள்ளது. அதில் தேசிய தலைநகரமான டெல்லியும் ஒன்று.
டெல்லி லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளதால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ - CAA) எதிராக தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக ஷாஹீன் பாக் பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை போராட்டம் செய்த இடத்தில் இருந்து டெல்லி காவல்துறை இன்று (செவ்வாய்க்கிழமை) அகற்றியது.
"கொரோனா அச்சம் காரணமாக ஷாஹீன் பாக் போராட்டத்தை கைவிடுமாறு, அவர்களிடம் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை மறுத்துள்ளனர். அதன் பின்னர், லாக்-டவுன் விதிகளை கடைபிடிக்காமல் செயல்படுவது சட்டவிரோதமானது என்பதால், அதை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தென்கிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆர்.பி. மீனா செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. தெரிவித்தார்.