புதுடெல்லி: 3 மாநகராட்சிகளை சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான கனரக பனிப்புகை நிலவுகிறது.
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனரக பனிப்புகை (காற்று மாசு) மூட்டம் நிலவுகிறது. இதனால் டெல்லி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
டெல்லியில் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பனிப்புகை நிலவுகிறது. காற்று மாசு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த கடுமையான சூழ்நிலை குறித்து டெல்லி மாநில அரசு சுகாதார எச்சரிக்கை வெளியிட வேண்டும். குழந்தைகள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறியுள்ளது
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காற்று மாசை கட்டுப்படுத்த சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. பதர்பூர் அனல்மின்நிலையத்தில் இருந்து பறக்கும் சாம்பல் உள்பட காற்றில் ஏற்பட்டுள்ள மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
காற்று மாசு மற்றும் மோசமான பனிப்புகை காரணமாக டெல்லியில் 3 மாநகராட்சிகளை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் தீர்ப்பாய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.