ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 9-ம் தேதி நடந்த போது பெரும் வன்முறை வெடித்தது. வன்முறையில் 8 பேர் பலியாகினர் மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து ஆனந்த்நாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையானது இல்லை என மாநில அரசு தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ஆனந்த்நாக் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 74 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு தேவை என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கூறியது.
இருப்பினும் 30 ஆயிரம் படை வீரர்களை ஆனந்த்நாக் பாராளுமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்ப தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் கூறிஉள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் நிலைமை சரியில்லை என கூறி ஆனந்த்நாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.
மோசமான சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. போதுமான பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமையும் இதற்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான உத்தரவை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டு உள்ளது.