நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் : என்னென்ன சிறப்பம்சங்கள் ?

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிராந்தை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்திய  பாதுகாப்புத்துறையின் மைல் கல்லாக கருதப்படும் ஐஎன்எஸ் விக்கிராந்த் போர்க்கப்பலின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.  

Written by - Chithira Rekha | Last Updated : Sep 1, 2022, 03:43 PM IST
  • ரூ.23,000 கோடி செலவில் உருவான ஐஎன்எஸ் விக்ராந்த்
  • நாளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
  • நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல்
 நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் : என்னென்ன சிறப்பம்சங்கள் ? title=

’ஐஎன்எஸ் விக்ராந்த் ‘ என்பது 1961-ம் ஆண்டு பிரிட்டிஷ் கடற்படையிடம் இருந்து வாங்கப்பட்ட கப்பலுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தப் போர்க்கப்பல் பெரும் பங்கு வகித்தது. 1997-ம் ஆண்டு இந்தக் கப்பலின் சேவை நிறைவு பெற்ற நிலையில், அக்கப்பலின் நினைவாக முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலுக்கு ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 2-வது விமானந்தாங்கி  போர்க்கப்பல் ஆகும்.

ஏற்கனவே இந்தியாவிடம் உள்ள விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டதாகும். தற்போது உலகில் ஐந்து அல்லது ஆறு நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி கப்பலைத் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளன. தற்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்திய கடற்படையால் வடிவமைக்கப்பட்டு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களை விட சுமார் 7 மடங்கு பெரியதாகும். இக்கப்பல் 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் எடை சுமார் 43 ஆயிரம் டன் ஆகும். 14 அடுக்குகள் கொண்ட இக்கப்பலில் 2,300 அறைகள் உள்ளன. இதில், 1,700 பேர் தங்க முடியும். அதிலும் பெண் அதிகாரிகளுக்கென பிரத்யேக அறைகளும் உள்ளன. 

மேலும் படிக்க | மீண்டும் பழைய கலால் வரி கொள்கை; இனி அரசே மது விற்பனை செய்யும்

இக்கப்பலைத் தயாரிக்க 23 ஆயிரம் டன் எஃகு, 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் மின்சார கேபிள்கள், 150 கிலோ மீட்டர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கப்பலில் உள்ள நான்கு என்ஜின்களும் சேர்ந்து 88 மெகாவாட் சக்தியை உருவாக்குகின்றன. அது ஒரு நகரத்திற்கே மின்சாரம் வழங்க போதுமானதாகும். விக்ராந்த் கப்பல் மிகப்பெரிய மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. 16 படுக்கை வசதிகள், இரண்டு அறுவை சிகிச்சை அறைகள், ஆய்வகங்கள், தீவிர சிகிச்சை பிரிவு அறைகள், சிடி ஸ்கேன் வார்டுகள், எக்ஸ்ரே வசதிகள், பல் மருத்துவ சிகிச்சை வசதி உட்பட நவீன மருத்துவ உபகரணங்கள் இதில் உள்ளன.
 INS Vikrant
இந்த விமானந்தாங்கி கப்பலில் 2 ஓடுதளங்கள் உள்ளன. இக்கப்பலிலிருந்து MiG-29K போா் விமானங்கள், Kamov-31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் - 60ஆா் ஹெலிகாப்டா்கள் என 30 விமானங்களை இயக்கவும், தரையிறக்கவும் முடியும். சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்த போர்க்கப்பல் உருவாகி உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 நாட்களுக்கு நடைபெற்றது. பின்னா் கடந்த அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டாலும், அடுத்த ஆண்டு இறுதியில் தான் இது முழுமையாக இயக்கத்திற்கு வரும். 

2015-ம் ஆண்டு முதல், நாட்டிற்காக மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை உருவாக்க கடற்படை அனுமதி கோரி வருகிறது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டால்,  இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலாக IAC-2 உருவாகும். இக்கப்பலுக்கு ‘ஐஎன்எஸ் விஷால்’ என்று பெயரிடப்பட உள்ளது. உள்நாட்டிலேயே போர்க்கப்பல் தயாரிப்பதற்கான சாத்தியத்தை நிஜமாக்கியதன் மூலம் ’ஐஎன்எஸ் விக்கிராந்த்’ இந்திய கடற்படையில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. 

மேலும் படிக்க | RIP: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாய் இத்தாலியில் காலமானார்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News