வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு - கேரளாவில் கொடூரம்

Kerala Wayanad Landslides: வயநாட்டில் இன்று நள்ளிரவிலும், அதிகாலையிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 106 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 30, 2024, 06:38 PM IST
  • வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
  • சூரல்மலை பகுதியில் ஒரு பாலம் இடிந்துவிட்டது.
  • இதனால் 400 குடும்பங்கள் அங்கு தனியாக சிக்கியுள்ளனர்.
வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு - கேரளாவில் கொடூரம் title=

Kerala Wayanad Landslides Latest News Updates: தொடர் மழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (ஜூலை 30) நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் 2ஆவது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 90க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தனியாக தவிக்கும் 400 குடும்பங்கள்

பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் வீடுகள், கடைகள் அனைத்தும் வெள்ளத்தாலும், மண்ணாலும் அடித்துச்செல்லப்பட்டது. சூரல்மலை பகுதியில் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ல பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது. முண்டகையில் இருந்து அட்டாமலை பகுதிக்குச் செல்ல அந்த பாலம் மட்டுமே இருந்தது. தற்போது பாலம் இடிந்ததால் மீட்புப் பணி கடினமாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் 400 குடும்பங்கள் சிக்கியிருப்பதாகவும், பாலம் இடிந்த நிலையில் மீட்புப் பணி தாமதமாகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த ஆற்றை மீட்புப் படையினர் கடந்துவிட்டனர். மாலை 5 மணிக்குள் முண்டக்கை பகுதியில் இருள் சூழந்துவிடும் என தெரிவித்த கல்பட்டா எம்எல்ஏ டி.சித்திக், அதற்கு முன் மீட்புப் பணியை நிறைவு செய்ய முயன்று வருகிறோம் என்றார்.  

மேலும் படிக்க | நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை காட்ட ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு - எம்பிக்களின் சிரிப்பலை

முதல்வரின் X பதிவு

அங்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சிலரின் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டது. மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு  விவரங்கள் இன்னும் தெரியவில்லை. நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வழிகாட்டுதல்களை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கி உள்ளார். அமைச்சர்கள் மேற்பார்வை மற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர், முழு அரசு இயந்திரமும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார். மீட்புப் பணியில் மாநில அரசு ராணுவத்திடம்  உதவியை நாடியது. இதை தொடர்ந்து உதகை வெல்லிங்டனில் இருந்து மெட்ராஸ் படைப்பிரிவு வயநாட்டிற்கு புறப்பட்டது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், கல்பட்டா எம்எல்ஏ டி. சித்திக் ஆகியோர் மீட்புப் பணியை ஒருங்கிணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள்

தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் படையில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையில் கூடுதல் வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அந்த பகுதியில் தனியாக சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அமைச்சர் ராமசந்திரன் கடன்னப்பள்ளி சம்பவ இடத்திற்கு விரைந்தார். இன்னும் சில அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு வந்துகொண்டிருக்கின்றனர். 

சூலூர் விமானப்படையில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் வயநாட்டிற்கு விரைகிறது. கன்னூர் பாதுகாப்பு படைகளில் 2 குழுக்கள் வயநாட்டிற்கு சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை அவசர கட்டுப்பாட்டு அறைகளை செயல்படுத்தி உள்ளன. 

அவசர மருத்துவ உதவிக்கு 8086010833 மற்றும் 9656938689 ஆகிய எண்களை தொடர்புகொள்ளவும். கல்பெட்டா, மேப்பாடி, வைத்திரி, மானந்தவாடி ஆகிய மருத்துவமனைகளில் அனைத்து அவசர தேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்தார்.

நிவாரணம் அறிவிப்பு

கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவரது X பதிவில்,"வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் தளவாட அல்லது மனிதவள ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது" என்றார்.

மேலும் படிக்க | சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர் - ராகுல் காந்தி பேசியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News