போலி என்கவுண்ட்டர்...விசாரணை ஆணைய அறிக்கையால் ஹைதராபாத் போலீஸாருக்கு சிக்கல்

2019-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதென விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : May 20, 2022, 06:03 PM IST
  • ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கு
  • போலீஸ் நடத்திய என்கவுண்ட்டர் போலி
  • விசாரணை ஆணையம் அறிக்கை
போலி என்கவுண்ட்டர்...விசாரணை ஆணைய அறிக்கையால் ஹைதராபாத் போலீஸாருக்கு சிக்கல் title=

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பணி முடிந்து இரவு வீடு திரும்பும் போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக கொல்லூருக்குச் செல்வது வழக்கம். சம்பவம் நடந்த 27-ம் தேதி அவசர பணி காரணமாக 6 மணியளவில் சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் பிரியங்கா வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றார். இதனை முன்கூட்டியே அறிந்து அவரது வண்டியை பஞ்சராக்கிய அந்த கும்பல், 9 மணியளவில் பிரியங்கா திரும்பி வந்தபோது அவருக்கு உதவி செய்வது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை எரித்துக் கொன்றது. 

நாட்டையே உலுக்கிய இந்த படுகொலை தொடர்பான வழக்கில் முகமது பாஷா என்ற லாரி ஓட்டுநரும், நவீன், சின்ன கேசவலு, சிவா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது நால்வரும் தப்பிக்க முயன்றதாக என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இந்த எண்கவுண்ட்டரை பொதுமக்கள் பரவலாக வரவேற்றனர். என்கவுண்ட்டர் செய்த போலீசார் மீது பூக்களைத் தூவி பொதுமக்கள் வாழ்த்தியதே அதற்குச் சான்று. இதற்கு ஒரு படி மேலே சென்று குஜராத்தைச் சேர்ந்த ராஜ்பா கோஹில் என்ற தொழிலதிபர், என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

மேலும் படிக்க | ஹைதராபாத் என்கவுன்டர்: காவல்துறையினர் மீது மலர் தூவி மக்கள் மகிழ்ச்சி!

இது ஒருபுறமிருக்க இந்த என்கவுண்ட்டர் மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓய்பு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 6 மாதங்களுக்குள் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், ஆணையத்தின் கோரிக்கையின் பேரில் 4 முறை அதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிபதி சிர்புர்கர் தலைமையிலான விசாரணை ஆணையம் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து அவர்களை தாக்க முயற்சித்ததாலேயே அவர்கள் சுடப்பட்டதாக போலீசார் கூறியது பொய் எனக் கூறப்பட்டுள்ளது. நால்வரையும் சுடவேண்டும் என்ற நோக்கத்திலேயே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த என்கவுண்ட்டர் முழுக்க முழுக்க போலீசாரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாகவும், மேலும் இதில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | நாட்டை உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்டர்; நடந்தது என்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News