அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாகவே, வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா முன் வந்திருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்...!
வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் போட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு வழங்கி வரப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. இதற்காக ட்ரம்ப் சொல்லும் காரணம் ‘அமெரிக்கா, ஒரு வளரும் நாடு’ என்பது தான்.
‘இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கிறது’ என்று குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் தான் ட்ரம்ப், ‘உண்மையில் வர்த்தகம் தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரும் இந்தியா நம்முடன் வர்த்தக ஒப்பந்தம் போட விரும்புகிறது’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு முறை வெளிநாட்டுத் தலைவர்கள் என்னைப் பார்க்க வரும் போதும், அவர்களுடன் நான் நட்புப் பாராட்டி இருக்கிறேன். நல்ல கணிவுடன் பழகி வருகிறேன். அது ஜப்பானின் அபே-வாக இருந்தாலும் சரி, இந்தியாவின் மோடியாக இருந்தாலும் சரி. நான் அனைவருடனும் நல்ல நட்பையை பேணி வருகிறேன். இதற்கு முன்பு வரை நம் நாட்டை, நம் நாட்டின் வர்த்தகத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
எனவே, அவர்கள் என்னுடன் பழகுவதற்கு சற்றுக் கடினமாகத் தான் இருக்கும். ஆனால், என்னை அவர்கள் மதிக்கிறார்கள். நம் நாட்டை மதிக்கிறார்கள்’ என்று பேசியவர் தொடர்ந்து, ‘நமது ஜிடிபி, வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் தற்போது நடந்து வருவது ஒன்றும் அதிசயமில்லை. இனி நடக்கப் போவது தான் அதிசயம். ஏனென்றால் நாம் இப்போது தான் தயாராகிக் கொண்டிருக்கிறோம்’ என்றார் முடிவாக.