இஸ்ரேல் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணை ஏவப்படது. இந்த ஏவுகணை இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
50 முதல் 70 கி.மீட்டர் வரை சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை முதலில் நேற்று பரிசோதிப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நேற்று ஏவுவது தள்ளி வைக்கப்பட்டதையடுத்து இன்று பரிசோதிக்கப்பட்டது.
பரிசோதனைகள் முடிந்த பின்னர் இந்த ஏவுகணை மூன்று படைபிரிவுகளிலும் இணைத்துக்கொள்ளப்படும். முன்னதாக ஏவுகணை பரிசோதிக்கப்படும் போது பாதுகாப்பு நடவடிக்கையாக, ஏவுதளத்திற்கு அருகாமையில் உள்ள கிராம மக்களை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றினர். அதேபோல், மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.