பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குருத்வாரா சாஹிப்பிற்கு வருகை தரும் இந்தியர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரில் இருந்து, பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு செல்லும் சிறப்பு பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், வரும் 9 ஆம் தேதி இந்த பாதையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்த்தார்பூர் குருத்வாரா சாஹிப்பைப் பார்வையிட செல்லும் இந்தியர்கள் கட்டாயம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) உறுதிப்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய எம்.இ.ஏ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில்; பாகிஸ்தானுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்றி அதில் வழங்கப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப செல்லும் என்று மீண்டும் வலியுறுத்தினார். கர்தார்பூர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து குழப்பமான தகவல்கள் வருகின்றன. யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவை என முதலில் தகவல் வந்தது. பின்னர், தேவையில்லை என வந்தது. அங்குள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் மற்ற அமைப்புகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
MEA: Reports coming in from Pak are conflicting,some times they say passport is needed&other times that it isn't. We think there are differences between their Foreign Office & other agencies.We have an MoU, it hasn't been changed,& as per it passport is needed. #KartarpurCorridor pic.twitter.com/mDGN5G3p2c
— ANI (@ANI) November 7, 2019
கர்தார்பூர் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனை மாற்ற முடியாது. இந்த ஒப்பந்தப்படி பாஸ்போர்ட் தேவை. கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்கள் என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தம் மூலம் நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். இந்த ஒப்பந்தத்தில், எந்த மாற்றத்தையும் தன்னிச்சையாக யாரும் மாற்றம் செய்ய முடியாது. இரு தரப்பும் ஒப்பு கொண்டால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என தெரிவித்தார்.
மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஒருதலைப்பட்சமாக மாற்ற முடியாது, அதற்கு இரு கட்சிகளின் ஒப்புதலும் தேவை என கூறினார்.