டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் உச்சகட்டத்தை எட்டியது. இம்மாநிலத்தில் போராட்டகாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைப்பெற்ற கலவரத்தில் இதுவரை 6 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனிடையே தலைநகர் டெல்லியின், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை., மாணவர்கள் கடந்த 15ம் தேதி அன்று போராட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றனர். இந்த போராட்டத்தில் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு தீயணைப்பு டெண்டர்களும் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரண்டு தீயணைப்பு படையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. ஜாமியா பல்கலைக்கழகம் பல்கலைக்கழக தேர்வுகளை பல்கலை., நிர்வாகம் ஞாயிறு அன்று ஒத்திவைத்த பின்னர் குளிர்கால விடுமுறையை அறிவித்தது. கால அட்டவணையின்படி, பல்கலைக்கழகம் டிசம்பர் 16 முதல் - ஜனவரி 6, 2020 வரை விடுப்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் அரசு பேருந்துகள் மீது தீ வைக்கப்பட்டதால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்ககு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஜாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சமூக விரோதிகள் சிலர் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் புகுந்து வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் இன்று இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.