இன்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: எடியூரப்பா கோரிக்கை

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 22, 2019, 09:17 PM IST
இன்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: எடியூரப்பா கோரிக்கை title=

பெங்களூரு: இரவு 12 மணி ஆனாலும் பிரச்சனை இல்லை. இன்று இரவே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சில், மஜத+காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை அடுத்து, கடந்த வாரம் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 

முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்று (ஜூலை 18) வாக்கெடுப்பு நடைபெற வில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இரவு முழுவதும் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். 

கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் கர்நாடக ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்தனர் பாஜக எம்எல்.ஏ-க்கள். ஜூலை 19 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வில்லை. 

இதனையடுத்து மீண்டும் பாஜகவினர் ஆளுநரிடம் முறையிட்டனர். அதன் பின்னர் ஆளுநர் தரப்பில் இருந்து, ஜூலை 19 ஆம் தேதி (வெள்ளிகிழமை) மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பட்டது. ஆனால் மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. திங்கட்கிழமை வரை அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மீண்டும் கர்நாடக சட்டப்பேரவை தொடங்கியது. இன்று குமாரசாமி ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் குமாரசாமி மேலும் இரண்டு நாள் அவகாசம் கோரியதால் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ அமளியில் ஈடுபட்டனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இரவு 12 மணி என்றாலும், நாங்கள் ரெடி, இன்று இரவே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இன்று வாக்கெடுப்பு நடத்த முடியாது என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Trending News