மேகதாது அணை விவகாரத்தில் இருமாநிலங்களுக்கு இடையே சமரசம் காணவேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்!
டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, மாநிலம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் தீர்வு வேண்டியும் பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகின்றார். அந்த வகையில் இன்று மாலை பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பிற்கு பின்னர் கர்நாடக பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்... "மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கான திட்டம்; தமிழகம், கர்நாடக அரசுகள் பேசி தீர்வு காணவேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்
Delhi: Karnataka Chief Minister HD Kumaraswamy meets Prime Minister Narendra Modi. pic.twitter.com/7xW1VjQbo0
— ANI (@ANI) December 27, 2018
மேகதாது திட்டம் இரு அரசுகள், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டேன்" என தெரிவித்தார்.
முன்னதாக நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் குமாரசாமி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது மேகதாது அணை பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேசுவதாக நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைப்பெற்று வரும் நிலையில் மேகதாது அணைப் பிரச்னையை முன்வைத்து அதிமுக மற்றும் திமுக MP-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுத்துள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில், கர்நாடக முதல்வர் மத்திய அரசின் உதவியை நாடி, தலைவர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.