காஷ்மீரில் அமைதியின்மை நீடித்து வரும் நிலையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு அமைதி திரும்பவில்லை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அம்மாநில முதல்வர் முப்தியும், மக்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே கலவரம் நடந்து கொண்டு உள்ளது. அம்மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லி வந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர். தற்போது காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று உள்ள நிலையில் புல்வாமா மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இளைஞர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் ஏற்பட்டு உள்ள அமைதியின்மையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் வன்முறை கும்பலை அடக்க முயன்ற பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி உள்ளனர். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உள்பட 18 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.