ரூ.1000 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகளுமான, எம்.பி.யுமான மிஸா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலங்கள் பினாமி பெயரில் அவரது குடும்பத்தினருக்கு கைமாறியதாக பாஜக அண்மையில் குற்றம்சாட்டியது. மேலும், இந்த நிலங்கள் யாவும் லாலுவின் மகள் மிஸா பாரதி உள்பட அவரது குடும்பத்தினர் இயக்குநர்களாக அங்கம் வகிக்கும் சில போலி நிறுவனங்களின் பெயரில் பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு குறித்து வருமான வரித்துறை வழக்கு ஒன்று பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், கடந்த 16-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக மிஸா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜூன் முதல் வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மிஸா பாரதிக்கும், அவரது கணவர் சைலேஷ் குமாருக்கும் வருமான வரித்துறை தனித்தனியே அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது.