லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு

Last Updated : Apr 9, 2017, 11:46 AM IST
லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு title=

ஹைதராபாத்தில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதையடுத்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டண உயர்வு ஆகிய வற்றை திரும்பப் பெற வேண்டும். பழைய வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் 

கடந்த மாதம் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் காரணமாக கடந்த 10 நாட்க ளாக தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் லாரிகள் இயக்கப் படாமல் நிறுத்தப்பட்டன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளும் தேக்கமடைந்தன. லாரிகள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்தது.

இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் 2 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், உயர்த்தப் பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணத்தை குறைப்பது தொடர்பான கோரிக்கை நீங்கலாக பிற கோரிக்கைகளில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. எனினும், காப்பீட்டுக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் 2-வது முறையாக நேற்று பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கோபால் நாயுடு, பொதுச் செயலாளர் சண்முகப்பா உள்ளிட்ட நிர்வாகிகள், காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணத்தை 40 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாகக் குறைத்துக்கொள்வது என ஆணையம் உறுதியளித்தது. இதையடுத்து கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர், கிளீனர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

Trending News