முஸ்லீம் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாத்தை சேர்ந்த சுமார் 50,000 ஆண்கள் மற்றும் பெண்கள் அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இஸ்லாம் முறைப்படி ஆண்கள் தங்கள் மனைவியிடம் மூன்று முறை அதாவது "தலாக், தலாக், தலாக்" என்று கூறினால் விவாகரத்து ஆகி விட்டதாக அர்த்தம். இந்த மூன்று முறை தலாக் கூறுவதற்கு முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பி.எம்.எம்.ஏ எனப்படும் பாரதிய முஸ்லீம் மகிளா அந்தோலன் என்ற அமைப்பு மூன்று முறை தலாக் கூறும் முறைக்கு தடை விதிக்க தேசிய மகளிர் ஆணையத்தை வலியுறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான விண்ணப்பத்தில் மக்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. இதுவரை மூன்று முறை தலாக் கூறும் முறைக்கு தடை விதிக்கக் கோரும் விண்ணப்பத்தில் சுமார் 50,000 முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இது குறித்து பி.எம்.எம்.ஏ அமைப்பின் துணை நிறுவனர் ஜகியா சோமன் கூறுகையில்:- இந்த விண்ணப்பத்தில் தமிழகம், தெலுங்கானா, கேரளா, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம் என்றார்.