பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்த சர்வதேச அமைப்பின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு!!
சர்வதேச அளவில் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பயங்கரவாதத்துக்கு வரும் நிதியுதவி உள்ளிட்ட சர்வதேச அளவிலான நிதி சார்ந்த பிரச்சினைகளை களைவதற்காக நிதி நடவடிக்கை அதிரடிக் குழு (எப்.ஏ.டி.எப்) என்ற சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுவின் வருடாந்திர கூட்டம் பாரிசில் நடைபெற்றது. இதில், பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியதால், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 27 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் நாடு கருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியை தடுப்பது தொடர்பாக சர்வதேச நிதி கண்காணிப்பகம் ஒரு செயல் திட்டத்தை பகிஸ்தானுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், அதனை பாகிஸ்தான் எப்படி செயல்படுத்துகிறது? என்பதை சில மாதங்கள் கழித்து ஆய்வு செய்யலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் முடிவை இந்தியா வரவேற்றுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை ரவீஷ் குமார் கூறும் போது, ‘பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி உதவியை தடுக்கத் தவறியதற்காக பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. அதேசமயம், நிதி கண்காணிப்பு அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தை பாகிஸ்தான் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் என நம்புகிறோம்’ என்று கூறினார்.