நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..! எதிர்கட்சிகள் வியூகம் என்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த எம்பிகளின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2024, 07:46 AM IST
  • இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்
  • குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது
  • நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..! எதிர்கட்சிகள் வியூகம் என்ன? title=

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், அவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இந்த இடை நீக்கம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் பட்ஜெட் தொடரையொட்டி நடைபெறும் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தொடரில் உரையாற்றும் குடியரசுத் தலைவரின் உரையில் கலந்து கொள்ளலாம். நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து டிசம்பர் 13ஆம் தேதி அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எம்பிகள் தொடர்ச்சியாக போராடினர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததற்காக, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இருந்து 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

மேலும் படிக்க | நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது

இது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அனைவரின் இடை நீக்கமும் திரும்ப பெறப்படுவதாக கூறினார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ராஜ்யசபாவில் அவைத்தலைவர் பியூஷ் கோயல், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி மற்றும் அவரது பிரதிநிதிகள் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் வி முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சியில் இருந்து காங்கிரஸின் பிரமோத் திவாரி மற்றும் கொடிக்குனில் சுரேஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதிப் பந்தோபாத்யாய், திமுகவின் டிஆர் பாலு, சிவசேனாவின் ராகுல் ஷெவாலே, சமாஜ்வாதி கட்சியின் எஸ் டி ஹசன், ஜேடியூவின் ராம்நாத் தாக்கூர் மற்றும் தெடிபியின் ஜெயதேவ் கல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஸ்ஸாமில் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை மீதான "வன்முறை தாக்குதல்" மற்றும் மாநில அரசின் கட்டுப்பாடுகள் குறித்த பிரச்சினையை தான் எழுப்பியதாக திவாரி கூறினார். நாட்டில் "எழுதப்படாத சர்வாதிகாரம்" நிலவுகிறது, மேலும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க சிபிஐ மற்றும் ஈடி போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

பட்ஜெட் கூட்ட தொடரின்போது வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயப் பிரச்சனை மற்றும் மணிப்பூர் நிலவரத்தை காங்கிரஸ் எழுப்ப முயற்சிக்கும் என்று சுரேஷ் கூறினார். இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு மத்திய திட்டங்களின் காரணமாக மேற்கு வங்காளத்திற்கு நிலுவையில் உள்ள தொகையை நிதியமைச்சர் சேர்க்க வேண்டும் என்று டிஎம்சியின் பந்தோபாத்யாய் கூறினார். ஆகஸ்ட் 15, 1947 -ல் இருந்த மத வழிபாட்டுத் தலங்களின் நிலையை முடக்கும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐ வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பியின் எஸ் டி ஹாசன் கோரினார். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை இந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து அவர் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் இது என்பதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குறுகிய காலம் மட்டுமே நடைபெறும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையுடன் புதன்கிழமை தொடங்குகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அவரது முதல் உரை இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.  

மேலும் படிக்க | 15 பேருக்கு மரண தண்டனை... பாஜக தலைவர் கொலை வழக்கு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News