CBI இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்னாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு....
CBI இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்தது. இந்த உத்தரவி எதிர்த்து CBI இயக்குநர் அலோக் வெர்மா, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘அரசுக்கு சாதகமாக சில வழக்கு விசாரணையில் முடிவெடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் CBI-க்கு சிக்கல் எழுந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது இன்று காலை 11:30 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், அலோக் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன் கூறியபோது மத்திய அரசின் முடிவால், வர்மாவின் 2 ஆண்டுகள் பதவிக்காலம் எப்போது வேண்டுமானாலும் குறைக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. சட்ட விதிகளுக்கு எதிராக சிவிசி மற்றும் மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளதாக கூறினார். அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எந்த மாதிரியான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதை ஆராய வேண்டும். பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவிடம் சிவிசி, 10 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனக்கூறினார்.
இதை தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், CBI தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர ராவ், வழக்கமான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகள் மாற்றம் குறித்து சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை நாகேஸ்வர ராவ் கொள்கை முடிவு எதையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. மேலும், CBI இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்னாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதி ஒத்திவைத்தார்.