‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!!
மத்திய அரசின் சாகித்ய அகாடமி கலை இலக்கியங்களின் சிறப்பான படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழில் சிறந்த படைப்பிற்காக சூல் எனும் நாவலுக்கு எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாணர்கள் மற்றும் நடனக் கலை புரியும் கூத்தர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களை மையக் கருவாகக் கொண்டு உருவாகிய இந்த நாவலுக்காக எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவல் `நிலம் பூத்து மலர்ந்த நாள்'. இந்த நாவல் மலையாளத்தில் வெளியான போனபோது வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின. மேலும், பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம்பெற்றிருக்கிறது. கேரளாவில் கொண்டாடப்பட்ட இந்த நாவலை செம்மையாக தமிழில் கே.வி.ஜெயஶ்ரீ மொழியாக்கம் செய்திருந்தார்.
இந்த மொழியாக்க விருதுக்குச் செம்பு பட்டயத்துடன் 50,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும். தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் பல்கலைகழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது.