நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் வங்கி கடன் மோசடிகள் குறித்து பிரச்னை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கி முறைகேடுகள் குறித்து பிரதமர் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் டி ராஜாவும் வங்கி மோசடி தொடர்பாக பிரச்னை எழுப்பப்படும் என தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடந்து கொள்வது குறித்து இதுவரை விவாதிக்க வில்லை. மேலும் கார்த்தி சிதம்பரம் கைது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கை கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் கட்சி பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் அரசு பல்வேறு சட்டங்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் சட்டத்தையும் நிறைவேற்ற அரசு முனைப்பாக உள்ளது.