மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான இடப் பகிர்வு தொடர்பாக பாரதீய ஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை ஒரு சுமுகமான முடிவை எட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது!
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சிவசேனா 126 இடங்களை கோருவதாகவும், சிவசேனாவின் கோரிக்கையை பாஜக தலைவர் அமித் ஷா நிராகரித்ததாகவும், சேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த வியாழன் அன்று முக்கிய கூட்டம் இடம்பெற்றதாகவும், இந்த கூட்டத்தில் சிவசேனா 126 இடங்களைக் கோரியதாகவும், அதற்கு பாஜக தரப்பு 122 இடங்கள் வரை ஒப்புக்கொண்டதாகவும், எனினும் சிவசேனா தனது கோரிக்கையில் இருந்து மாறவில்லை என்றும் தெரிகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் இடம்பெற்றதாக தெரிகிறது.
எனினும்., புதன்கிழமை (செப்டம்பர் 25), சேவி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் நவி மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர், இந்த நிகழ்வு கூட்டணி இன்னும் அப்படியே இருப்பதை உறுதிப்படுத்தியது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற இடங்கள் உள்ளன, சிவசேனா இதற்கு முன்னர் சமமான இடங்களை கோரியது. முன்னதாக சிவசேனா 144 இடங்களுக்கு போட்டியிடுவதில் பிடிவாதமாக இருந்தது, ஆனால் சிவ சேனாவுக்கு இவ்வளவு இடங்களை விட்டுச்செல்ல பாஜக தயக்கம் காட்டியதால், கட்சி தனது கோரிக்கையை 126 இடங்களாக குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்கு இழப்பீடாக ஆதித்யா தாக்கரை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்றும் சிவசேனா கோரிக்கை முன்வைத்துள்ளது.
முன்னதாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியினரை பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார் என்றும், ஆனால் அவர் சட்டமன்றத் தேர்தலில் தனியாக செல்ல விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. இந்த தகவலின் உறுதி நிலை தற்போது வரையில் கேள்விகுறியாகவே உள்ளது...
முன்னதாக கடந்த 2014-ல் பாஜக-வும் சிவசேனா-வும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டனர், எனினும் முடிவுகளுக்குப் பிறகு அவர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்தனர். 2014-ஆம் ஆண்டில், பாஜக 122 இடங்களைக் கொண்ட ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது, சிவசேனா 63 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் மற்றும் என்சிபி முறையே 42 மற்றும் 41 இடங்களை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.