சோன்பத்ரா படுகொலை: பிரியங்கா காந்திக்கு மம்தா பானர்ஜி ஆதரவு!

பிரியங்கா காந்திக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு; விதிகளை பின்பற்றுமாறு பாஜகவிடம் வேண்டுகோள்..!

Updated: Jul 21, 2019, 08:21 AM IST
சோன்பத்ரா படுகொலை: பிரியங்கா காந்திக்கு மம்தா பானர்ஜி ஆதரவு!

பிரியங்கா காந்திக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு; விதிகளை பின்பற்றுமாறு பாஜகவிடம் வேண்டுகோள்..!

கடந்த 17 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க நேற்று முன்தினம் அப்பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி, சாலையில் அமர்ந்து தர்ணா தனது தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். 

சோன்பத்ராவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் தான் திரும்ப மாட்டேன் என்று கூறி அங்கேயே இரவு முழுவதும் போராட்டம் நடத்தினார். இரவிலும் தர்ணா போராட்டம் நடந்தது. 
இந்நிலையில், நேற்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவரது உறவினர்கள் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை சந்திக்க விருந்தினர் விடுதிக்கு வந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சாடியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை வன்முறை மற்றும் கும்பலாக தாக்கிய சம்பவங்களில் 1,100 பேர் உயிரிழந்துவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்கத்தில் கலவரம் வெடித்தால் பாஜகவினர் உண்மை அறியும் குழுவை அனுப்பி வைப்பதாக குற்றம் சாட்டிய அவர், உத்தரப்பிரதேசத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் ஒரு குழுவை அனுப்பினால் அக்குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர் என்று குறிப்பிட்டார். பிரியங்கா தர்ணா போராட்டம் நடத்தியதில் தவறு இல்லை என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்தார்.