மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக பொது மக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாற்ற கோரிய மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான பரப்பளவை 500மீட்டரில் இருந்து 100 மீட்டராக குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிட்டார். தமிழக அரசு சார்பில், அரசுக்கு கிடைக்கும் ரூ.25,500 கோடி வருமானம் உச்சநீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் 1,731 மதுக்கடைகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கெஹர் கூறியதாவது:-
வருமானத்திற்காக மக்களின் உயிரை பறிக்க அனுமதிக்க முடியாது என்றார். மாநில அரசு வருமானம் ஈட்டுவதற்கான வேறு வழிமுறைகளை கண்டறிய வேண்டும். மாநில அரசுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். ஒரு மாநிலத்தின் வருமானத்திற்காக மக்களின் உயிரை பறிக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.