புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் பெத்துல் பகுதியில் ஒரு தனித்துவமான திருட்டு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது திருடன் கடவுளின் பெயரில் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு கோயிலின் நன்கொடை பெட்டியை உடைத்து திருடியுள்ளான். இந்த சம்பவம் பெத்துல் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் வார்டில் அமைந்துள்ள சித்தேஸ்வர் ஹனுமான் கோவிலில் நன்கொடை பெட்டியை உடைத்து ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் செய்வதற்கு முன்னர் திருடன் இறைவனுக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் நான் செய்யும் அனைத்து குற்றங்களையும் மன்னிக்க வேண்டும் என்றும், நான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதால் தான் திருடுவதாகவும் எழுதியுள்ளார். இந்த கடிதம் நன்கொடை பெட்டியின் அருகே வைக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை பக்தர்கள் கோயிலை திறந்து உள்ளே சென்றபோது தான் நன்கொடை பெட்டி உடைந்திருப்பதைக் கண்டனர். அதன் அருகில் இந்த கடிதமும் இருந்ததையும் பார்த்தார்கள்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக நன்கொடை பெட்டி திறக்கப்படவில்லை மற்றும் பெட்டியில் சுமார் 40 முதல் 50 ஆயிரம் பணம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சரணியின் சித்தேஸ்வர் ஹனுமான் கோவிலில், திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத திருடர்கள் நன்கொடை பெட்டியை ரம்பத்தால் வெட்டி பணத்தை திருடிச் சென்றனர். இந்த விவகாரம் குறித்து பக்தர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். திருடியது யார் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடத் தொடங்கியுள்ளனர்.
திருடன் கடிதத்தில் கூறியது, கடவுளே, நான் இதுவரை செய்த அனைத்து தவறையும் நீங்கள் மன்னித்துவிடுங்கள். இன்று முதல் நான் திருடிவதை முழுமையாக விட்டுவிடுவேன். இதுபோன்ற எந்த தவறும் நான் செய்ய மாட்டேன். தந்தை போல நீங்கள் என்னை காக்க வேண்டும். எல்லாம் சரியாக நடந்தால் நீங்கள் எனக்கு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள் என்பதை நான் புரிந்துகொள்வேன். கடவுளே, நான் மாட்டிக்கொள்ளாமல் எல்லாம் சரியாக நடந்தால், உங்கள் கோவில்களில் ரூ. 500க்கு நன்கொடை அளிப்பேன் எனக் கூறியுள்ளார்.