மகாத்மா காந்தி குறித்த பேச்சால் சர்ச்சை எழுந்ததையடுத்து, தான் காந்திக்கு எதிராக எதுவும் கூறவில்லை என பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே மறுத்துள்ளார்!!
பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம், இது போன்ற நபர்களை எப்படி மகாத்மா என்று அழைக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார். அதுமட்டும் இன்றி, “பிரிட்டிஷ் ஆதரவுடன் தான் அவருடைய போராட்டங்கள் நடைபெற்றது, அவர்கள் ஒரு முறை கூட போலீஸாரால் தாக்கப்பட்டதில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, தான் காந்திக்கு எதிராக எதுவும் கூறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே கூறுகியில்; "இதுதொடர்பாக ஊடகங்களில் வரும் தகவல்கள் அனைத்தும் தவறானது. தற்போது விவாதித்துக் கொண்டிருப்பது எதையும் நான் ஒருபோதும் கூறியதே இல்லை. இது அவசியமற்ற சர்ச்சை. பிப்ரவரி 1, 2020-இல் பெங்களூருவில் பேசியது என்னுடையக் கருத்துதான். எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்ல மகாத்மா காந்தியையோ அல்ல வேறுயாரையுமே நான் குறிப்பிடவில்லை. நான் சுதந்திரப் போராட்டத்தை வகைப்படுத்தவே முயற்சித்தேன்.
இதைச் சுற்றி நடைபெறும் விவாதங்கள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இல்லாத ஒன்றைப் பற்றி நான் என்ன கூறுவது? என்னுடையக் கருத்து பொதுத் தளத்தில் உள்ளது. யாருக்காவது அதைப் பார்க்க வேண்டும் என்றால் இணையதளத்திலும், என்னுடைய வலைத்தளத்திலும் உள்ளது. மகாத்மா காந்தி, நேரு மற்றும் மற்ற சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு எதிராக நான் ஏதேனும் கூறியிருந்தால் அதைக் காட்டுங்கள்.
BJP MP Anant Kumar Hegde on his statement against Mahatma Gandhi: All related media reports are false, I never said what is being debated over. It is an unnecessary controversy. pic.twitter.com/VKWnssxehi
— ANI (@ANI) February 4, 2020
சாவர்க்கர் குறித்த நிகழ்ச்சி அது. நமது அனைத்து சுதந்திரப் போராட்டக்காரர்களுக்குமான உரிய மரியாதையுடன், சுதந்திரப் போராட்டம் குறித்து பேசினேன். அதில் சுதந்திரப் போராட்டம் அல்லது சுதந்திரப் போராட்டக்காரர்கள் குறித்து எந்தவித குழப்பமோ, தரக்குறைவான கருத்தோ இல்லை. தேவையில்லாத தொந்தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.